

கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2,449 கிலோ கஞ்சாவை தீயிலிட்டு அழிக்கும் காவல் துணை ஆணையர் சக்திவேல்.
சென்னை: கடத்தல் காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2,449 கிலோ கஞ்சாவை போலீஸார் தீயிட்டு அழித்தனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் 784 போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 2,449 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றை தீயிட்டு அழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து சென்னை காவல் துறை துணை ஆணையர் (நுண்ணறிவுப் பிரிவு-1) சக்திவேல், தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் கே.தேவராஜன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன ஆலையில் கஞ்சா தீயிலிட்டு எரித்து அழிக்கப்பட்டது.
இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கும், சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களது வலையமைப்புகளுக்கு எதிராக காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.