

ராஜு
தாம்பரம்: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கபடி பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ராஜூ. அப்பகுதியில் உள்ள சிறுமிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கபடி பயிற்சி அளித்து வருகிறார். கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற ஜூனியர் கபடி போட்டியில், இவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் ராஜூவும் கவனம் பெற்றார்.
அந்த வீராங்கனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மற்றும் பரிசுகளை வழங்கியதுடன், பயிற்சியாளர் ராஜூவுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், ராஜூவிடம் பயிற்சி பெற்று வரும் 17 வயது மாணவியான வீராங்கனை, பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த மாணவிதாய், தந்தை இல்லாததால், தனது பாட்டியின் ஆதரவோடு படித்துக்கொண்டு கபடி பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில்தான், கடந்த 9-ம் தேதி முதல் 3 முறை தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பயிற்சியாளர் ராஜூ மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதையடுத்து, அவர் தலைமறைவாகி உள்ளார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, ‘தன்னுடன் அனுசரணையாக செல்லும் வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் ராஜூ அணியில் சேர்த்துக் கொள்வதில் முன்னுரிமை கொடுத்ததாகவும், மறுக்கும் வீராங்கனைகளை பயிற்சியின்போது மற்றவர்களின் முன்னிலையில் அவமதித்து பேசியும், தாக்கியும் வந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.