

சரவண பெருமாள், சுந்தர்.
மதுரை: செங்கல் சூளைக்கு மண் எடுத்து செல்ல அனுமதிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். உடன் அவரது வாகன ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) சரவண பெருமாள். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒருவர், மானாமதுரையில் செயல்பட்டுவரும் செங்கல் சூளைக்கு மண் எடுத்துச் செல்ல சரவண பெருமாளிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அறிவுரையின்படி, நேற்று மதியம் பரமக்குடி ஓட்டப்பாலத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் முகாம் அலுவலகத்தில் வைத்து ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கியுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், சரவண பெருமாளைகைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது வாகன ஓட்டுநர் சுந்தரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார், வருவாய் கோட்டாட்சியரின் முகாம் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூ.5.52 லட்சத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை நிறைவுபெறும்பட்சத்தில் மட்டுமே, இந்த சம்பவத்தில் உள்ள முழுமையான விவரங்கள் தெரியவரும். மதுரையில் உள்ள கோட்டாட்சியர் வீடு, பரமக்குடி அருகே உள்ள ஓட்டுநரின் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.