மதுரையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது

மதுரையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது
Updated on: 
1 min read

மதுரை: ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார், வேலூர் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரவு, பகலாக போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சுகானந்த கணேஷ்(40), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியை சேர்ந்த ஜெயபாரதிராஜா (41) ஆகியோரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனைதொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது, அதில் 400 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவரிடகளிடம் இருந்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில், உதவி ஆணையர் அசோகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் மதுரை வீரன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர், விளாச்சேரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

ரூ. 2 கோடி மதிப்பு: இதுகுறித்து துணை ஆணையர் இனிகோ திவ்யன் நிருபர்களிடம் கூறுகையில், “போதைக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரையில் அதிக எண்ணிக்கையில் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆன்லைன் மூலமாக மாத்திரைகள் வாங்கியதாக தெரிவித்தனர். யாரிடம் இருந்து வாங்கினார்கள், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருவோம். இளைஞர்கள் அதிகம் போதைக்கு அடிமையாகின்றனர். அதனை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

இதனிடையே, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த தனிப்படை காவல் அதிகாரிகளை, ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் பாராட்டினர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதை மத்திரைகளின் சந்தை மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மதுரையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை

X