

சென்னை: பள்ளிக்கூட வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியின் டிக்கியை உடைத்து, பணம், ஆவணங்களை திருடிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த பெண் இந்து (35). இவர் கடந்த மாதம் 18-ம் தேதி மதியம் தனது பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர, ஸ்கூட்டியில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார்.
பள்ளி வளாகத்துக்குள் சென்று திரும்பி வந்தபோது, வாகனத்தின் டிக்கியில் வைத்திருந்த ரூ.26,500 ரொக்கம், ஏடிஎம் கார்டு, ஆர்சி புத்தகம், ஆதார், பான் கார்டு, வீட்டு சாவிகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை மர்ம நபரால் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து, சிறிது நேரத்தில் அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.2,500 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து, இந்து அளித்த புகாரின் பேரில், கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது கொளத்தூர் கண்ணகி நகரைச் சேர்ந்த பிரதீப் (44) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதீப் அதே பகுதியில் ஒரு டியோ இருசக்கர வாகனத்தையும், மற்றொரு இடத்தில் ஒரு செல்போனையும் திருடியிருப்பது தெரிய வந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட பிரதீப் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கும், 11 திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.