பழநி அணையில் கால்களில் கல் கட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் சடலமாக மீட்பு

பழநி அணையில் கால்களில் கல் கட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் சடலமாக மீட்பு
Updated on
1 min read

பழநி: பழநி பாலசமுத்திரம் அருகேயுள்ள பொருந்தலாறு பகுதியில் காணாமல் போன 12-ம் வகுப்பு மாணவரின் உடல் அணையில் இருந்து மீட்கப்பட்டது. கால்களில் கல் கட்டப்பட்டிருந்ததால் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடுத்த பாலசமுத்திரம் அருகேயுள்ள பொருந்தலாறு அணை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துஷ்யந்த் (17). நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (ஆக.6) மாலை நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அச்சமடைந்த பெற்றோர், உறவினர்கள் உதவியுடன் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பொருந்தலாறு அணை பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதந்த நிலையில் இருப்பதை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். அப்போது, கால்களில் கல் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டதாக தெரிகிறது.

உடலை கைப்பற்றிய தாலுகா போலீஸார் பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்டது அதே பகுதியைச் சேர்ந்த துஷ்யந்த் என்பதும், இரவு முழுவதும் காணாமல் போன நிலையில் சடலமாக அணை பகுதியில் கண்டெடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இருப்பினும், மாணவரின் கால்களில் கல் கட்டப்பட்டிருந்ததால், உயிர் பிழைக்காமல் இருக்க மாணவரே காலில் கல்லை கட்டிக் கொண்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேத்தின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழநி அணையில் கால்களில் கல் கட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் சடலமாக மீட்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in