

சென்னை: “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் மீட்க வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித் தொழிலுக்கு மத்திய அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும். நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றது கண்டிக்கத்தக்கது.
2 விசைப்படகுகளில் சென்ற 11 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அத்துமீறி கைது செய்து, விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குறிப்பாக இயந்திரக்கோளாரால் விசைப்படகு நின்ற போது இலங்கை கடற்படையினர் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டது மனிதாபிமானமற்றது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்வதால் மீனவர்களின் மீன்பிடித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு மீனவர்களால் பொருளாதாரம் ஈட்டமுடியாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
அதோடு, இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவக் குடும்பங்கள் அச்சத்துடனே வாழ்கின்றன. மீனவர்களின் குடும்பங்கள் பொருளாதாரமின்றி மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபட மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
எனவே, மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு இலங்கை கடற்படையினரால் இனிமேல் எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், மேலும் உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் மீட்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.