

ஜீவா
சென்னை: சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி, வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வடிவேலு (42). இவர் கொளத்தூர், வடக்கு மாட வீதியில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 9-ம் தேதி மதியம் வடிவேலு தனது கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அதற்கு வடிவேலு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், வடிவேலுவை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்து வடிவேலு அளித்த புகாரின்பேரில், ராஜமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், வழிப்பறியில் ஈடுபட்டவர் கொளத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜீவா என்ற ஈரல் ஜீவா (24) என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிந்தது.
ஜீவா, சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கெனவே 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 16 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.