

கதிர்வேல்
சென்னை: உதவி கேட்பதுபோல் நடித்து, மாணவனிடம் கத்தி முனையில் மிரட்டி தங்கச் செயினைப் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கல்பாளையம், சூரியா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ம் தேதி மாலை, வீட்டின் அருகே உள்ள இடத்தில் டியூஷன் முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் அந்த மாணவனை ஒருவர் இடைமறித்து லிப்ட் கேட்டுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு மாணவனை அழைத்துச் சென்ற அந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி, மாணவனின் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், மாணவனிடம் நகையைப் பறித்துச் சென்றது சென்னை கொளத்தூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கதிர்வேல் (39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மாணவனிடம் பறிக்கப்பட்ட தங்கச் செயினும் மீட்கப்பட்டது. வேலைக்குச் செல்லாமல் கதிர்வேல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.