நெல்லை அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு - நடந்தது என்ன?

நெல்லை அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு - நடந்தது என்ன?
Updated on
2 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது, அவரை சுட்டுப் பிடித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (40), அவரது மகன் ஜெயராஜ் (5) ஆகியோர் வீரவநல்லூரை அடுத்த மாதுடையார்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது கடந்த சில நாட்களுக்குமுன் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மூலச்சியை சேர்ந்த பெருமாள்பாண்டியன் மற்றும் சித்திரபுத்திரன் ஆகியோர் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 2007-ம் ஆண்டு முதல் இரு தரப்பை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதும், அதன் தொடர்ச்சியாக இந்த இரட்டைக் கொலை நடந்ததும் தெரியவந்தது.

இந்தக் கொலை வழக்கில் இதுவரை பெருமாள் பாண்டியன் தரப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் விஜயா என்ற பெண் உள்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனிடையே காளிமுத்து, ஜெயராஜ் ஆகியோரது உடல்களை நேற்று முன்தினம் அவர்களது உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.

இந்த இரட்டைக் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் மூலச்சி கிழக்கு தெருவை சேர்ந்த அஜித் என்ற கிருஷ்ணன் (28) என்பவர் மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சினேகாந்த் தலைமையில் காவலர் பரமசிவன் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த அஜித்தை போலீஸார் சுற்றி வளைக்கவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் பரமசிவனை அஜித் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் அஜித்தை காலில் ஒருமுறை துப்பாக்கியால் சுட்டு, அவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் காவலர் பரமசிவன் மற்றும் அஜித் ஆகியோரை முதலுதவி சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 2 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்வேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று காவலர் பரமசிவனிடம் நலம் விசாரித்தனர்.

இதனிடையே, இரட்டை கொலை வழக்கில் சுபாஷ் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்ததால் அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தேடப்பட்ட மணி என்ற மணிமாறன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார். இதையடுத்து இந்த இரட்டை கொலையில் இதுவரை கைதாகியவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு - நடந்தது என்ன?
“அவர்கள் என்னை கொல்லக்கூடும்” - டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in