“அவர்கள் என்னை கொல்லக்கூடும்” - டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்

“அவர்கள் என்னை கொல்லக்கூடும்” - டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாத வாக்கில் தானும் தனது கட்சியின் மூத்த தலைவர்களும் நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் வங்கதேசத்துக்குச் செல்லும்போது அவர்கள் என்னை கைது செய்யலாம் அல்லது என்னைக் கொல்லக்கூட கூடும் என்று தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமராக இருந்தபோது, கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட மாணவர் புரட்சி காரணமாக உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து டாக்காவில் இருந்து தப்பித்து அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவருடன் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமால் உள்ளிட்டவர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஷேக் ஹசீனா, “நாடு திரும்புவதற்கான தனது திட்டம் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் விளக்கி உள்ளார். அவர் தனது பேட்டியில், வரும் டிசம்பர் வாக்கில் நானும் அவாமி லீக்கின் மற்ற தலைவர்களும் சுய முடிவின் அடிப்படையில் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டுள்ளோம். நான் திரும்பும்போது அவர்கள் என்னை கைது செய்யலாம் அல்லது கொல்லக்கூடக் கூடும். எனினும், நான் சென்றே ஆக வேண்டும். எனது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். மரணம் நேரிட்டால் அது எனது சொந்த மண்ணில், எனது பெற்றோர்கள் அடக்கம் செய்யப்பட்ட மண்ணில், அவர்கள் ரத்தம் சிந்திய மண்ணில் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

டாக்காவில் உள்ள அதிகாரிகள் என்னை மீண்டும் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். என்னை திருப்பி அனுப்புமாறு அவர்கள் இந்தியாவுக்கு தொடர்ந்து கடிதங்களை அனுப்பி வருகின்றனர். நானே நேரில் செல்வேன். நான் நாடு திரும்புவதன் மூலம் நாட்டின் மிக முக்கிய அரசியல் எதிரியை அந்த அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதை அறிய விரும்புகிறேன். நான் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். சட்ட நடவடிக்கைகள் தொடங்கும்போது நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வளவு கேலிக்கூத்தானவை என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்று நான் உணர்கிறேன். அதை நிரூபிக்க விரும்புகிறேன்.

எங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கிட்டத்தட்ட அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் பலர் தலைமறைவாக உள்ளனர். வங்கதேசத்துக்கு திரும்புவதற்கான திட்டம் குறித்து டாக்காவில் உள்ள அதிகாரிகளுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஜனநாயகம், வாக்குரிமை, அவாமி லீக்கின் அரசியல் உரிமைகள், நீதி ஆகியவை ரகசிய பேச்சுவார்த்தைக்குரிய விஷயங்கள் அல்ல. சிறைவாசம் குறித்து நான் அச்சப்படவில்லை. இதற்கு முன்பும் பலமுறை நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.

எனது ஆட்சிக்காலத்தில் தவறுகள் நடந்திருக்கலாம். ஒரு அரசாங்கம் நீண்ட காலம் செயல்படும்போது தவறுகள் நடக்கலாம். எந்தவொரு அரசாங்கமும் தவறுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால், ஒரு அரசாங்கத்தின் நன்மை தீமைகளையும், சரி தவறுகளையும் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கே உரியது. அந்த தீர்ப்பை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன்.

அவாமி லீக் கட்சியை மறுசீரமைக்கும் பணிகளின் ஒரு பகுதியாக மொத்தமுள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 125 தொகுதிகளில் இணைய வழி கூட்டங்களை நடத்தியுள்ளேன். வங்கதேச அரசு என் மீது குற்றத் தீர்ப்பை வழங்கி இருக்கலாம். அதனால், நான் இனி தேர்தல்களில் போட்டியிட முடியாமலும் போகலாம். ஆனால், அவாமி லீக் கட்சிக்கு அவர்கள் ஏன் தடை விதிக்க வேண்டும். நாங்கள் மோசமாக செயல்பட்டிருந்தால் அது குறித்த மக்களே முடிவெடுக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

“அவர்கள் என்னை கொல்லக்கூடும்” - டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்
ராமர் கோயில் விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு தண்டனை கோரி கையெழுத்து இயக்கம்: கேஜ்ரிவால் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in