

கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மூலம் சுற்றுலாப் பயணிகளிடம் போதை காளான் விற்பனை செய்யும் நபர்கள் மீதான நடவடிக்கையை போலீஸார் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ‘மேஜிக் மஸ்ரூம்’ எனும் போதைக் காளான் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
கொடைக்கானலை பொறுத்தவரை வழக்கமாக மதுவும், கஞ்சாவும், போதை காளானும்தான் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வந்தன. ஆனால், சமீபகாலமாக போதை மாத்திரைகள், பவுடர்கள், போதை ஸ்டாம்ப், போதை சாக்லேட் என ரகம் ரகமாகப் போதைப் பொருள்கள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து கொடைக்கானலில் வலம் வருகின்றன.
சட்டவிரோதமாக செயல்படும் சில தனியார் விடுதிகளில், அவர்களே சுற்றுலாப் பயணிகளுக்கு போதைக் காளான் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். அதனால், இங்கு வந்து தங்கும் சுற்றுலாப் பயணிகள் போதைப் பொருட்களுக்காக மீண்டும் மீண்டும் கொடைக்கானல் வருகின்றனர். இதனைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு போலீஸார் சீல் வைத்து வருகின்றனர்.
போலீஸாரிடம் சிக்காமல் இருக்க போதைப் பொருள் கடத்தல் கும்பல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை விற்பனைக்காக பயன்படுத்துகின்றனர். போதைக் காளான் உள்ளிட்ட போதை பொருட்களை வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
அந்த வீடியோவை பார்த்து தொடர்பு கொள்ளும் சுற்றுலாப் பயணிகளை ஓரிடத்துக்கு வரவழைத்து விற்பனை செய்கின்றனர். தனியாகச் செல்லும் சுற்றுலா பயணிகளை மிரட்டி அவர்கள் அணிந்திருக்கும் நகை, பணத்தை பறிப்பதும் நடக்கிறது.
சுற்றுலா நகரமான கொடைக்கானல் தனது அடையாளத்தை இழந்து, போதை நகரமாக மாறி வருகிறது. கொடைக்கானலின் இந்த நிலைமையை மாற்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீஸார் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் கூறியதாவது: போதைக் காளான் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்து வருகிறோம். சட்ட விரோதமாக இயங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலைக்கிராம மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உடல்நலப் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க சுற்றுலா தொடர்பான சமூக வலைதளங்கள், இணையதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று கூறினர்.