

கரூர்: மதுரை அவனியாபுரத்தில் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், தலா ரூ.27.90 லட்சம் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை அவனியாபுரத்தில் 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிய வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராமர்பாண்டி (36), மதுரை மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்த மணிகண்டன் (37), கார்த்திக் (36), முத்துவிஜி (22), சந்திரசேகர் (31), சோனையா (31), நாகராஜ் (31), முத்துக்கருப்பன் (31), மோகன் (38), விக்னேஷ் (33), சந்தோஷ் (33) ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் முத்து விஜி கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியதால் இவ்வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு 2017-ம் ஆண்டு மாற்றப்பட்டது. மேலும், இவ்வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ராமர் பாண்டி அரவக்குறிச்சி அருகே 2024-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், 69 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, உயிரிழந்த 2 பேர் தவிர மீதியுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என்று மார்ச் 23-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்பிறகு தண்டனை விவரம் அறிவிப்பு ஏப்.6, ஏப்.15, ஏப்.21 (நேற்று) ஆகிய தேதிகளுக்கு 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி கே.ஹெச். இளவழகன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
சலுகைகள் கிடையாது
அதில், குற்றவாளிகள் 9 பேருக்கும் தலா 7 ஆயுள் சிறை தண்டனை, கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக (பிபிடிஎல்) இரு பிரிவுகளில் 5 மற்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், தண்டனையில் எவ்வித சலுகைகளும் வழங்க முடியாது என்றும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.27.90 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளிகள் 9 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.