

குன்னம் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.44 கோடி பணத்தை பெரம்பலூர் கோட்டாட்சியர் அனிதாவிடம் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படையினர்.
பெரம்பலூர் / நீலகிரி / கோவில்பட்டி / தென்காசி: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் திமுக நிர்வாகி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.44 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டபேரவை தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட செங்குணம் பகுதியில் வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெரம்பலூரில் இருந்து குன்னம் தொகுதிக்குட்பட்ட கீழப்புலியூரை நோக்கி வந்த ஒரு காரை, தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி சோதனை செய்தனர். இதில், காரில் இருந்த 5 அட்டைப் பெட்டிகளை பறக்கும் படையினர் திறந்து பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதில் ரூ.2 கோடியே 44 லட்சம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தையும், காரையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பெரம்பலூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அனிதாவிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக காரில் இருந்த திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், கார் ஓட்டுநர் ராஜேஷ் கிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அந்தப் பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணம் குன்னம் தொகுதி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பெரம்பலூரில் இருந்து எடுத்து செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நீலகிரியில் ரூ.22 லட்சம்
இதேபோல் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.22 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இங்கு வாக்காளர்களுக்கு வழங்கவிருப்பதாக வந்த தகவலயைடுத்து நேற்று முன்தினம் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் திமுக நிர்வாகிகள் சிலரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்பாளர் வீட்டில் ரூ.48 லட்சம்
மேலும் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிடும் சுந்தர்ராஜ் வீட்டிலும் ரூ.48 லட்சத்து 3,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா என விசாரணை நடந்து வருகிறது.
தேர்தல் பறக்கும் படையினருக்கு வந்த தகவலின்பேரில் ஓட்டப்பிடாரம் முப்புலிவெட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். சுமார் 7 மணி நேரம் நடந்த சோதனையில் ரூ.27 லட்சத்து 65,000 சிக்கியது.
வீட்டின் பின்புறம் ஒரு பையில் இருந்த ரூ.6 லட்சத்து 38,000-மும் மற்றொரு பையில் ரூ.14 லட்சமும் இருந்தது. இதன்படி, மொத்தம் ரூ.48 லட்சத்து 3,000 பறிமுதல் செய்யப்பட்டது. அவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடையத்தில் ரூ.44 லட்சம்
இதுபோல், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள கட்டிடத்தில் வைத்து திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு நேற்றிரவு 8 மணிக்கு தகவல் கிடைத்தது. அங்கிருந்த ரூ.44 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.