

ராகுல், பிரவீன் குமார்
சென்னை: ஜவுளி அதிபர் வீடு புகுந்து கத்திமுனையில் முகமூடி கொள்ளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். சென்னை புழல், கிழக்கு காவாங்கரை, மகாவீர் கார்டன் மெயின் தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார்.
மணிப்பூரில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 30-ம் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் கத்திமுனையில் விஜயகுமார், அவரது மனைவி, தாய் மற்றும் 2 மகள்களை மிரட்டி கட்டிப்போட்டு பீரோவிலிருந்த ரூ.25 லட்சம், 13 பவுன் தங்க நகை, பூஜை அறையில் வைத்திருந்த சுமார் 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து காரில் தப்பினர்.
இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப் பதிந்து, முதல் கட்டமாக சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவான கொள்ளையர்கள் தப்பிய கார் எண்ணை அடிப்படையாக வைத்து் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், கொள்ளையில் ஈடுபட்டது சென்னை எண்ணூர் பெரியகாசி கோவில் குப்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ராகுல் (28), புழல் என்எஸ்கே தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (28) என்பது தெரிந்தது.
இவர்களை கைது செய்து சிறையில் அடைந்த போலீஸார் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளான 4 பேரை தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.