

சென்னை: ஐடி நிறுவன விருந்து நிகழ்வின்போது, மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சக ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் (36) ஒருவர், கடந்த 2024-ம் ஆண்டு பட்டாபிராமில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்நாத் (26) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
நிறுவனம் சார்பில் நடந்த பார்ட்டி நிகழ்வின்போது, கோகுல்நாத் அந்த பெண்ணுக்குத் தெரியாமல் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயக்கத்தில் இருந்த அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி, பலமுறை அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண், வேலையை ராஜினாமா செய்துள்ளார். தனது செல்போன் எண்ணையும் மாற்றிவிட்டு கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பெண்ணின் புதிய செல்போன் எண்ணை கண்டுபிடித்த கோகுல்நாத் கடந்த 26-ம் தேதி அவரை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி பாலியல் ரீதியாக மீண்டும் மிரட்டியுள்ளார்.
மேலும் 2 பெண்கள்
இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின்பேரில், ஓட்டேரி போலீஸார் கோகுல்நாத்தை பிடித்து விசாரித்தனர்.
இதேபோல, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் 2 பெண்களையும் அவர் மிரட்டி தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து, செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.