

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான ரூ. 1,000 கோடி மதிப்புள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்தில் அகற்ற அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருத் தொண்டர் அறக்கட்டளையின் தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோடலம் மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி, திருமலைத் தேவர் போன்ற கோயில்களுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. இந்த சொத்துகள் சரியாக பராமரிக்கப்படாமல் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்த நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டப்பட்டு, முறைகேடாக வாடகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளும் இதை கண்டுகொள்வது இல்லை இதுதொடர்பாக புகார் அளித்தாலும் சிவில் பிரச்சினை எனக்கூறி போலீஸாரும் தலையிடுவதில்லை.
இந்த கோயில் சொத்துகளை மீட்க கடந்த 2023-ம் ஆண்டு முதல் மனுக்கள் அளித்தும் அறநிலையத்துறையும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ஏ.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘இந்த கோயில்களுக்கு சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல வணிக நிறுவனங்கள் குத்தகைத் தொகையையும், வாடகையையும் கொடுக்காமல் கோயில் சொத்துகளை சொந்தம் கொண்டாடி வருகின்றன’’ என்றார்.
அறநிலையத்துறை தரப்பில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வார காலத்துக்குள் அகற்றி, அந்த நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக் கும் உத்தரவிட்டுள்ளனர்.