

மேலப்பாளையத்தில் வீட்டில் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் நசிம் உசேன் (35) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நியாஸ் அலி மகன் நசிம் உசேன். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில், அவரை மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருமாறு நிலைய மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மனைவியை அழைத்துச் செல்லாமல், நேற்று முன்தினம் இரவில் வீட்டில் வைத்து நசிம் உசேன் பிரசவம் பார்த்துள்ளார். இதில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.
"சிசுவின் உடலை காட்டு ஜூம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்துள்ளனர்" என, மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுமதி, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, நசிம் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.