

மதுரை: வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.50 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்றபோது இந்த போதைப்பொருள் சிக்கியது.
கொழும்பு வழியாக தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு பல கோடிக்கணக்கான மதிப்புள்ள விலை உயர்ந்த கஞ்சா கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்க இலாகா நுண்ணறிவு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை விமான நிலையம் வந்தடைந்த விமானத்தில் பயணித்த ஆண் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் தீவிர பரிசோதனை செய்தனர். அப்போது, கேரள மாநிலம் கொடுவாலி பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவரின் பேக்கில் சாக்லேட் பாக்கெட்டுகளுக்கு நடுவில் சாக்லேட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அதில், விலை உயர்ந்த சுமார் 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற வகை கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், பாங்காங்கில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்திருப்பது தெரிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பயணியிடம் சுங்கத் துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் ரூ.9.50 கோடி மதிப்பிலான கடத்தல் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை. தரம் உயர்ந்த வகையாக கருதும் இந்த கஞ்சாவை மருந்து தயாரிக்கவும், போதைக்காகவும் பயன்படுத்தலாம். தாய்லாந்தில் இருந்து மதுரை வழியாக காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.