மயிலாடுதுறை அருகே சொத்து, பணம் தராத ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கணவர் கொலை: மனைவி, 3 மகள்கள் கைது

மயிலாடுதுறை அருகே சொத்து, பணம் தராத ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கணவர் கொலை: மனைவி, 3 மகள்கள் கைது
Updated on: 
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சொத்து, பணத்தை தராத ஆத்திரத்தில் ரூ.5 லட்சம் கொடுத்து ஆட்களை ஏவி கணவரை கொன்ற வழக்கில் மனைவி, 3 மகள்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகேயுள்ள இலுப்பூரை சேர்ந்தவர் மகேந்திரன்(57). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு மனைவி சரஸ்வதி (60), மகள்கள் மகா லட்சுமி(32), கலைவாணி(31), அட்சயா தேவி(19) ஆகியோர் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. அட்சயா தேவி, திருப்பூரில் பணியாற்றி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய மகேந்திரன், மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அவரது சகோதரி குடும்பத்தார் கவனித்து வந்துள்ளனர். கடந்த அக்.15-ம் தேதி வீட்டில் இருந்த மகேந்திரனை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

போலீஸார் விசாரணையில் மகேந்திரன் தனது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.47 லட்சம் மற்றும் வீடு, வீட்டுமனைகள் ஆகியவற்றை தனது சகோதரியின் மகனுக்கு கொடுக்க இருந்ததும், இதனால் தங்களுக்கு சொத்து கிடைக்காது என்ற ஆத்திரத்தில் அவரை, அவரது மனைவி மற்றும் 3 மகள்கள் சேர்ந்து, இளையமகள் அட்சயாவின் காதலரான திருப்பூர் ஆண்டி பாளையம் பி.கவுதம்குமார் (22,) அவரது நண்பர் கி.ரஞ்சித்குமார் (21) ஆகிய இருவரிடம் ரூ.5 லட்சம் பணம் கொடுத்து ஏவி, மகேந்திரனை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சரஸ்வதி, மகாலட்சுமி, கலைவாணி, அட்சயா தேவி, கவுதம்குமார், ரஞ்சித்குமார் ஆகிய 6 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சிக்கியது எப்படி? - மகேந்திரன் கொலை செய்யப்பட்டபோது வீட்டில் இருந்த அவரது மகள் மகாலட்சுமி, தனது தந்தையை, தன்னை பிரிந்து வாழும் கணவர் பிரபாகரன் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக பொறையாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன் கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் பிரபாகரன் அன்றைய தினம் பொறையாறு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

அவர் காவல் நிலையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும் நிலையில், அவர் தான் கொலை செய்தார் என மகாலட்சுமி கூறியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மகேந்திரனின் மனைவி மற்றும் 3 மகள்களிடம் விசாரணை நடத்தியபோது, சொத்துக்காக அவர்கள் பணம் கொடுத்து ஏவி மகேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது.

மயிலாடுதுறை அருகே சொத்து, பணம் தராத ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கணவர் கொலை: மனைவி, 3 மகள்கள் கைது
ஆண்கள், பெண்களுக்கு ‘ஆட்டோ இலவசம்’, அரசு ஊழியர்களுக்கு ‘2 மடங்கு கட்டணம்’ - மதுரை ஆட்டோ டிரைவரின் சவாரி அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in