

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 160 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டூர் அருகே கருப்புக்கிளார் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் கோவிந்தராஜ் (65). இவரது மனைவி விமலா (61). மத்திய அரசு தொழிலாளர் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இருவரும் தீபாவளி சீர்வரிசை கொடுப்பதற்காக குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.
இருவரும் இன்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 160 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து உறவினர்கள் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவலறிந்த திருவாரூர் எஸ்பி சதீஷ்குமார், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பவானி மற்றும் காவலர்கள் கொள்ளை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தீபாவளி சீர்வரிசை கொடுக்கச் சென்ற நேரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து நகை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இவர்களது மகன் திருமணமாகி, மனைவியுடன் சென்னையில் வசிக்கிறார் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.