

நவீன், பிரார்த்தனா
சென்னை: ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது செய்யப்பட்டார். சென்னை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நிகல்சந்த் ஜெயின் (51). சென்னை, என்எஸ்சி போஸ் சாலையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் 4 வருடங்களாக பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நவீன் (28) என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 6-ம் தேதி நிகல்சந்த் ஜெயின், தனது தங்கை கணவரிடம் சென்று, 26 கிலோ வெள்ளிக் கட்டியை பெற்றுக் கொண்டு, மின்ட் தெருவில் உள்ள திலீப் என்பவரிடம் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து பணம் ரூ.65 லட்சம் பெற்று தன்னிடம் அதை கொடுக்குமாறு நவீனிடம் கூறி அனுப்பி வைத்தார்.
அதன்படி, நவீன் ரூ.65 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால், அந்த பணத்தை முதலாளியிடம் கொடுக்காமல் நவீன் தலைமறைவானார். இதுகுறித்து, நிகல்சந்த் ஜெயின் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பதுங்கி இருந்த நவீனை போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
விசாரணையில், அவர் சமீபத்தில் பழக்கமான ராயபுரத்தைச் சேர்ந்த திருநங்கை பிரார்த்தனா (19) என்பவருடன் சேர்ந்து திட்டமிட்டு, ரூ.65 லட்சம் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.
முன்னதாக, பிரார்த்தனாவிடம் ரூ.63 லட்சத்தை கொடுத்து விட்டு, ரூ.2 லட்சத்துடன் நவீன் தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து, நவீன் பிடிபட்ட நிலையில், திருநங்கையான பிரார்த்தனாவும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.