

சென்னை: சென்னையை அடுத்த மீஞ்சூரில் கல்லூரி மாணவியை வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாடியில் மாணவி தேர்வுக்காக படித்து கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு மாடி வழியாக வந்த கஞ்சா போதை நபர்கள், அந்த மாணவியை வெட்டி விட்டு தப்பி ஓடிய நிலையில், அதில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாஜா மசூதி தெருவில் வசித்து வருபவர் முகமது அஸ்கர். இவருக்கு சல்மா என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். இவரது மகள் சுமையா ஃபாத்திமா (18) தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவி ஃபாத்திமா தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்தார். நேற்று இரவு இந்த மாணவி தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் தனியாக படித்து கொண்டிருந்த நிலையில், மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் ஃபாத்திமா வீட்டு பின்புறம் உள்ள முட்புதர் வழியாக பக்கத்து வீட்டு மாடி வழியாக ஏறி ஃபாத்திமா வீட்டு மாடியில் குதித்தனர்.
பின்னர் கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், ஃபாத்திமா அறையில் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, மாணவி ஃபாத்திமா கூச்சலிடவே ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் கத்தியால் ஃபாத்திமாவை கை, கால் , தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர்.
அப்போது, ஃபாத்திமா அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், தப்பி ஓட முயன்ற மூவரில் ஒருவரை மட்டும் விரட்டிச் சென்று பிடித்து அடித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஃபாத்திமாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் போலீஸார், கைது செய்யப்பட்ட இளைஞர் டில்லி பாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் சிலருடன் சேர்ந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டு வந்ததும், மேலும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை அடுத்த மீஞ்சூரில் மாடியில் தேர்வுக்காக படித்து கொண்டிருந்த மாணவி ஒருவரை கஞ்சா போதை கும்பல் எந்தக் காரணமும் இல்லாமல் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.