விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

விருதுநகர் தொகுதியில் நான்கு முனைப் முனைப் போட்டி நிலவுகிறது. இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெற கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக நேரடியாக களம் காணாமல் இந்த முறை புதிதாக கூட்டணியில் சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒதுக்கியுள்ளது. அக்கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகருக்கு புதியவர் அல்ல. கடந்த மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் களம் கண்டவர். அதனால் பலருக்கும் அவர் பரிச்சயமானவர்.

தேர்தல் பிரச்சாரங்களில் தனது தந்தை விஜயகாந்தைப் பற்றி 'சென்டிமென்டாக' பேசி வாக்குகளை சேகரித்து வருகிறார். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அவருக்கு பலமாக உள்ளது.

அதிமுக வேட்பாளர் வி.ஜி.கணேசன் விருதுநகருக்கு புதியவர். கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை நேரடியாக அதிமுக களமிறங்குகிறது. இதனால் அதிமுகவினர் உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

சீட் கிடைக்காதவர்களும் மன வேறுபாடுகளை மறந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, மோடி ஆகியோரின் பெயர்களை கூறி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இளைஞர்கள், இளம் பெண்களின் வாக்குகளை கவர பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

விருதுநகருக்கு பரிட்சயமானவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லட்சுமணன். ஏற்கெனவே சமூக அமைப்புகளோடு இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த முறை தங்கள் கட்சி வேட்பாளருக்கு தீவிர பிரச்சாரம் செய்து வந்த லட்சுமணனுக்கு இந்த முறை வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள வாக்குகளை பெற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தவெகவினர் புதிய வாக்காளர்களையும், இளம் வாக்காளர்களையும் வளைக்கும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக வேட்பாளர் செல்வம் உள்ளூர்வாசி என்பதால் பலருக்கும் அறிமுகமானவர். கட்சியில் உள்ள இளைஞர் படை இவருக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிலும் எங்களுக்கு ஓட்டு நிச்சயம் என்று கூறி நம்பிக்கையோடு களப்பணியாற்றி வருகின்றனர் தவெகவினர்.

இந்த முறை வெற்றியை தீர்மானிப்பதில் இளம் வாக்காளர்களின் பங்கு அதிகம் என்பதால், அவர்களை குறிவைத்து 4 கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் வெற்றிபெறப்போவது யார் என்பது மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.

விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in