

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியை சேர்ந்த மாணவி, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கிறார். தற்போது பருவத் தேர்வு நடைபெற்று வருவதால், கடந்த 14-ம் தேதி இரவு வீட்டின் முதல் மாடியில் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் 4 பேர், வீட்டின் பின்புறம் உள்ள முட்புதர் வழியாக பக்கத்து வீட்டு மாடியில் ஏறி, மாணவியின் வீட்டு முதல் மாடிக்கு தாவி அங்குள்ள பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களை கண்டதும் மாணவி கூச்சலிட்டதால், இளைஞர்கள் மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த மாணவியின் அலறல் கேட்டு முதல் மாடிக்கு சென்ற அவரது பெற்றோர், சகோதரர், அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய இளைஞர்களை பிடிக்க விரட்டினர்.
இதில், 3 பேர் தப்பிய நிலையில், வல்லூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்ற ரோலக்ஸ் (23) பிடிபட்டார். மீஞ்சூர் போலீஸாரிடம் பொதுமக்கள் அவரை ஒப்படைத்தனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவி மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த மீஞ்சூர் போலீஸார், டில்லிபாபுவை கைது செய்தனர்.
தொடர்ந்து, தனிப்படை போலீஸார், தப்பியோடி தலைமறைவாக இருந்த வல்லூர் பகுதியை சேர்ந்த சித்திக் (19), லோகேஷ் (22), அத்திப்பட்டு, பாலமேடு பகுதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் (24) ஆகிய 3 பேரையும் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.
நால்வரும் பொன்னேரி ஜே.எம்-1 நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.