

யாஸ்மின், விவேக், தினேஷ் சவுத்ரி, தேஜராம்
சென்னை: வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு மற்றும் மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.92 கோடி பணம் மற்றும் சுமார் 90 பவுன் நகைகளை ஏமாற்றிய கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கோமளவல்லி. இவருக்குச் செங்கல்பட்டைச் சேர்ந்த யாஸ்மின் மற்றும் அவரது கணவர் விவேக் (எ) சின்னா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் மற்றும் ‘TAISHA’ அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளைக் குறைந்த விலைக்குப் பெற்றுத் தருவதாக இந்தத் தம்பதியினர் கோமளவல்லியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய கோமளவல்லி பல்வேறு தவணைகளாக ரூ.1.80 கோடி பணத்தையும், 713 கிராம் தங்க நகைகளையும் மோசடி கும்பலிடம் கொடுத்துள்ளனர். மேலும், நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகப் போலி ஒதுக்கீடு ஆவணங்களையும் இந்த கும்பல் காட்டியுள்ளது.
இதுமட்டுமின்றி, கோமளவல்லியின் உறவினர் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி தனியாக ரூ.12 லட்சமும் வாங்கியுள்ளனர்.
பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட தம்பதியர், கூறியபடி வீடுகளையோ மருத்துவச் சீட்டையோ வாங்கித் தராமல் ஏமாற்றி, காலம் கடத்தி வந்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோமளவல்லி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அறிவுறுத்தலின்படி, புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முதல்கட்டமாக, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை பொன்மார் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் (எ) யாமினி, அவரது கணவர் விவேக் (எ) சின்னா ஆகிய இருவரை கடந்த 7-ம் தேதி போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாக இருந்த சென்னை திரிசூலம் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் தினேஷ் சவுத்ரி மற்றும் அவரது தந்தை தேஜராம் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.