ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து: வடமாநில தம்பதி உயிரிழப்பு

ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து: வடமாநில தம்பதி உயிரிழப்பு
Updated on
1 min read

ஆற்காடு: ஆற்காடு அருகே பிரபல ஐஸ்கிரீம் தயாரிக்கும் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வட மாநில தம்பதி உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பேருலால் (50). இவரது மனைவி சுந்தர் தேவி (42). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். பேருலால் கடந்த 10 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தேவி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வாடகை கட்டிடத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு கடை நடத்தினார். இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் சுற்று வட்டார பகுதிகளுக்கு சில்லறை மற்றும் மொத்த விற்பனை செய்து வந்தார் பேருலால்.

இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் இன்று (ஏப்.13ம் தேதி) அதிகாலை கடையில் ஐஸ்கிரீம் தயாரிக்க பால் காய்ச்சும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக கடையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு, கடை தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் கடை முழுவதும் தீ மளமளவென பரவியது.

கடையின் ஷட்டர் உட்புறமாக மூடப்பட்டு இருந்ததால் கணவன்- மனைவி இருவரும் கடையில் இருந்து உடனடியாக வெளியேற முடியால் அங்கேயே சிக்கிக்கொண்டனர். மேலும் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற வீரர்கள், தீ விபத்தில் சிக்கிக் கொண்ட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

<div class="paragraphs"><p><em>தீ விபத்தில் உயிரிழந்த பேருலால் - சுந்தர் தேவி தம்பதி</em></p></div>

தீ விபத்தில் உயிரிழந்த பேருலால் - சுந்தர் தேவி தம்பதி

உடலில் 60 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்ட கணவன்- மனைவிக்கு முதலுதவி அளித்து மருத்துவர்கள் பரிந்துரையின்படி மேல் சிகிச்சைக்காக வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து: வடமாநில தம்பதி உயிரிழப்பு
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 பேர் காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in