

புவனேஸ்வரி, சிலம்பரசன்
சென்னை: எழும்பூர் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டார். சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர் புவனேஸ்வரி (29).
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள புள்ளிசைபள்ளம் பகுதியைச் சேர்ந்த இவர், 2016-ல் காவல் துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தார்.
2024-ல் காவலர் சிலம்பரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதிலிருந்தே சிலம்பரசன் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த சிலம்பரசன், புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தூங்கச் சென்ற நிலையில், புவனேஸ்வரி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவில் கண்விழித்துப் பார்த்த சிலம்பரசன், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புவனேஸ்வரி திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞரான ஆண் நண்பர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். கணவர் சிலம்பரசன் அந்த பணத்தை திரும்ப வாங்குமாறு மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதன்படி, புவனேஸ்வரி கொடுத்த பணத்தை கேட்டபோது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் பணத்தை கொடுக்கவில்லையாம். இதைத் தொடர்ந்து புவனேஸ்வரி, வழக்கறிஞர் மீது திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். சம்பவத்தன்று இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவியிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இறப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், புவனேஸ்வரியின் பெற்றோர் எழும்பூர் காவல் நிலையத்தில் சிலம்பரசன் மீது புகார் தெரிவித்தனர்.
புவனேஸ்வரியின் தாய் அன்புக்கரசி கூறும்போது, “திருமணமான நாளிலிருந்து வரதட்சணை கேட்டு மகளை, சிலம்பரசன் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மகள் போன் செய்து, நிலம் வாங்க கணவர் ரூ.2 லட்சம் கேட்பதாகக் கூறினார்.
நாங்கள் மகளிடம் சண்டையிடாதீர்கள், பணம் தருகிறோம் என்று கூறினோம். இரவு 10 மணிக்கு எழும்பூர் போலீஸார் எங்களை அழைத்து புவனேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். சிலம்பரசன்தான், எங்கள் மகளை கொலை செய்திருக்க வேண்டும். அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதனிடையே, தற்கொலைக்கு காரணமாக இருந்த சிலம்பரசனை போலீஸார் கைது செய்தனர்.