அலங்காநல்லூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை - பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

Updated on
1 min read

மதுரை: அலங்காநல்லூர் அருகே ஆசிரியர் திட்டியதாக 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. இதனிடையே, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்த பெற்றோரின் 16 வயது மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். இவரை ஆங்கில ஆசிரியர் சில தினங்களுக்கு முன்பு திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டிலேயே நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி இறப்பதற்கு முன் தனது பெற்றோருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இறந்த மாணவி பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற நிலையில் தற்போது படிப்பில் பின் தங்கியதாலும், மேலும் மாணவர் ஒருவரை காதலித்து அவரது பெயரை நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவியை ஆசிரியர், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸாரின் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கணக்கனோர் பள்ளியை முற்றுகையிட்டு சம்பந்தபட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை குறித்து சமயநல்லூர் போலீஸார் விசாரிகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

அலங்காநல்லூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை - பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
நாமக்கல் அருகே ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி நாமக்கல் எம்பி உண்ணாவிரதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in