எப்க்யூஎல் செயலி பணமோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்

எப்க்யூஎல் செயலி பணமோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்
Updated on
1 min read

சென்னை: பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

‘எப்க்யூஎல்’, ‘விஜி’ ஆகிய செல்போன் செயலிகள் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், நாள்தோறும் அமெரிக்க டாலரில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி மாபெரும் நிதி மோசடி நடத்தப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.

மதுரை மேலூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதால் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. மதுரையில் மட்டும் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள நிலையில், 3 நாட்களில் 34,300-க்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து மதுரை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மேலூர் கட்டயம்பட்டியைச் சேர்ந்த கல்லாணை, புஷ்பம், பஞ்சு உட்பட 12 பேர், அலங்காநல்லூரில் 5 பேர், நத்தத்தில் 4 பேர் என இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியான மேலூர் ரஞ்சித் மற்றும் அவரது தம்பி அருண் ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களின் 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் சொத்துக்களை விற்க தடை விதிக்க பதிவுத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரொக்கம் மற்றும் கூகுள் பே மூலம் பெறப்பட்ட பணம், கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு வாலெட்டுகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பணத்தை எடுக்க முடியாதவாறு செயலி முடக்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இந்த மோசடியில் சர்வதேச தொடர்புகள், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஆகியவை அடங்கியுள்ளதால், பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளையும் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றி தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் இன்று உத்தரவிட்டார்.

எப்க்யூஎல் செயலி பணமோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.1,080 குறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in