

தாம்பரம்: வேப்பேரியைச் சேர்ந்த தீபக் சேன்ஷெட்டி (47), தனியார் நகை நிறுவனத்தின் சென்னை கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களுக்கு மாதிரி நகைகளை காட்டி ஆர்டர்கள் பெறுவதற்காக, ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகளுடன் கடந்த 22-ம் தேதி வந்தே பாரத் ரயிலில் மதுரைக்கு சென்றார்.
பணி நிறைவு பெற்றதும் 23-ம் தேதி இரவு அனந்தபுரி ரயிலில் சென்னை திரும்பினார். பயணத்தின்போது தனது செல்போன். ஆப்பிள் வாட்ச், தங்க மோதிரம் ஆகியவற்றை நகைகள் இருந்த பையில் வைத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்த போது, அந்தப் பை மாயமானது தெரிந்தது.
ஆப்பிள் வாட்ச் செயலி மூலம் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே பை கிடப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பையில் ஆப்பிள் வாட்ச் மட்டும் இருந்தது. ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டிருந்தன. ஸ்ரீரங்கம் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.