

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
சென்னை: விண்வெளிச் சூழலில் ஜிபியு அடிப்படையிலான கணினி செயல்பாட்டுக்கான கதிர்வீச்சு தடுப்பு உத்திகளை உருவாக்குதல் தொடர்பாக, இன்குபேஷன் ஒப்பந்தம் பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மேற்கொண்டது.
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அடல் இன்குபேஷன் மையத்தில் "தொழில் நுட்பங்களின் பயன்பாடு: ஆய்வகத்திலிருந்து நிலத்துக்கு மற்றும் விண்வெளிக்கு” என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோவின் பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, “அடல் இன்குபேஷன்- மேம்பட்ட அறிவியல், தொழில் நுட்பத்துக்கான அறக்கட்டளை போன்ற இன்குபேஷன் மையங்களின் ஊக்கத்தால், நாட்டின் துடிப்பான டீப்டெக் ஸ்டார்ட்- அப் சூழலுக்கும். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் போன்ற முன்னணி ஆராய்ச்சி. மேம்பாட்டு மையங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது” என்றார்.
நிகழ்ச்சியில், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம், ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் டேனியல் பாபு, அணு சக்தித் துறையின் தற்போதைய தொழில்நுட்ப பரிமாற்றம், இன்குபேஷன் வழிமுறைகள் குறித்து பேசினார்.
மயில்சாமி அண்ணாதுரை யால் வழிகாட்டப்படும் டீப் டெக் நிறுவனமான பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் "விண்வெளிச் சூழலில் ஜிபியு அடிப்படையிலான கணினி செயல்பாட்டுக்கான கதிர்வீச்சுத் தடுப்பு உத்திகளை (Radiation Hardening Strategies) உருவாக்குதல்" தொடர்பான இன்குபேஷன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி.பிள்ளை, அடல் இன்குபேஷன்- மேம்பட்ட அறிவியல், தொழில்நுட்பத்துக்கான அறக்கட்டளை (AIC FAST) இயக்குநர் என் சுப்பிரமணியன் நிறுவனப் பிரதிநிதிகளுடன் பரிமாறிக் கொண்டனர்.
புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களிடமிருந்து தொழில்நுட்பப் பரிமாற்ற உரிமங்களைப் பெறும் மாநிலத்தின் புத்தொழில் நிறுவனங்களின் (startups) நலனுக்காக உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்- அப் குழுவினர் சமர்ப்பித்தனர்.