

சபரிவர்மன்
நாகர்கோவில்: நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, சிறைக்காவலர்கள் 3 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் தனது வீட்டின் அருகே பெட்டிகடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி சபரிவர்மன் கடையில் புகையிலை பொருட்கள் இருந்ததாக கூறி, போலீஸார் கைது செய்து நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர்.
சிறையில் சபரிவர்மன் நேற்று முன்தினம் காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, சிறை அலுவலர்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை பார்க்கவேண்டும் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்பி ஸ்டாலின், நீதிபதி ஆகியோர் நேற்று நாகர்கோவில் கிளை சிறையில் சிறை காவலர்கள் மற்றும் சக கைதிகளிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதனால், சபரிவர்மன் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொள்ளவில்லை.
இதனிடையே, சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததும், அவரது மரணத்துக்கு அதுவே காரணம் என்பதும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, நாகர்கோவில் கிளைச்சிறை தலைமைக் காவலர் ஜெகன், முதன்மை தலைமைக் காவலர் திருமலைநம்பி, சிறைக்காவலர் சிவகுமார் ஆகிய மூவரும் நேற்றிரவில் கைது செய்யப்பட்டனர்.
உதயநிதி கண்டனம்: இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவு: காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும். தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.