

பிரேம்குமார்.
சென்னை: ரூ.5,000 கோடி நிதி மோசடி புகாரில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.பிரேம்குமாரைக் கேரள போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.
பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கம் (பிஎல்எம்) அதிக வருமானம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்ததாகப் புகார்கள் எழுந்தன. முதலீட்டுத் திட்டங்களின் கால அவகாசம் முடிந்த பிறகும், சிலர் தங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம், தனிப்பட்ட வங்கிக் கணக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், அந்தப் பணத்தின் மூலம் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தப் புகார்கள் தொடர்பாக அமலாக்கத் துறையும் பண மோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தின் (பிஎல்எம்) நிறுவனத் தலைவர் பிரேம் குமாரைக் கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று கைது செய்தனர். ரூ.5,000 கோடி வரையிலான நிதி மோசடி குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிரேம்குமார் திடீரென 2 முறை மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, அவரது உடல்நிலை சீராக உள்ளதை உறுதி செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற்ற பின்னர், பிரேம்குமாரைப் போலீஸார் கேரளா அழைத்து சென்றனர்.
பல துறை வளர்ச்சி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பிரேம்குமார், சென்னையில் வளர்ந்தவர். அவரது தந்தை சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றி உள்ளார்.
கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து, சாதாரண மக்களுக்கு நிதியுதவி வழங்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களின் ஆதரவுடன் 2006-ம் ஆண்டு பிஎல்எம் அமைப்பைத் தொடங்கி உள்ளார்.
பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் கீழ் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, வீட்டு வசதி மற்றும் நில மேம்பாட்டைத் தாண்டி பல்வேறு தொழில்களில் விரிவடைந்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் செயல்பட்டது.
மேலும், இந்த நிறுவனத்தின் தொழில்களில் பயணிகள் போக்குவரத்து, சிமெண்டு உற்பத்தி, நகை விற்பனை, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உயிரிவாயு உற்பத்தி ஆகியவை அடங்கும். அதோடு கல்வி மற்றும் மருத்துவத் துறைகளிலும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லஞ்ச புகார்
பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விசாரணையைத் தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் கண்காணித்த அதிகாரிகள் சென்னை வந்து கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சமரசம் செய்யக் கூடாது என்பதில் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உறுதியாக இருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.