

சென்னை: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இடமில்லை என்ற வசனம் கொண்ட காணொலியை திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும்கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில்மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூர்தொகுதியில் தோல்வியடைந்தார்.
இது திமுகவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக 38 பேர் கொண்ட குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
இந்தக் குழு, தமிழகம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு இன்று (18-ம் தேதி) முதல் நேரில் சென்று தோல்விக்கான காரணங்கள் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராய உள்ளனர்.
இந்நிலையில், திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன் தனது எக்ஸ் தளத்தில், நடிகர் சந்தானம் மன்னர் வேடம் அணிந்து நடித்துள்ள திரைப்படக் காட்சி ஒன்றை நேற்று பகிர்ந்துள்ளார்.
அதில், என் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோர் இருக்கக் கூடாது என்ற கருத்துகள் இடம் பெற்றுள்ளன. வெறும் 12 வினாடிகள் மட்டுமே கொண்ட எழிலனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத் தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.
திமுகவில் மூத்தவர்கள் விலகி இளைய தலைமுறைக்கு அதிகம் வாய்ப்புகள் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.