

கும்பகோணம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுவர்கள் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 17 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் அண்மையில் புகார் மனு அளித்திருந்தனர்.
அதில், தங்களது மகளை சிலர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனால் அவர் கர்ப்பம் அடைந்ததாகவும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், 2022-ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் அந்தச் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய பாபநாசத்தை அடுத்த சூலமங்கலத்தைச் சேர்ந்த சுரேந்திர பாண்டியன்(21), சண்முகம்(21), அசோக்(21), பசுபதிகோவிலைச் சேர்ந்த ஜெயசுதன்(21) மற்றும் 3 சிறுவர்கள் என 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், பாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் 3 பேரும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர். கர்ப்பிணியாக உள்ள சிறுமி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியை 7 பேர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.