

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகள் நடவுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக 4 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.
மே மாத இறுதியில் பூங்காவில் பழக் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் 66-வது பழக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. சால்வியா, டேலியா, பால்சம், மேரி கோல்டு, ஆஸ்ட்டர், பேன்சி, பிளாக்ஸ் உட்பட்ட 125-க்கும் மேற்பட்ட ரகங்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ளன. பூங்கா முழுவதும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.
நடவுப் பணியை தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி தொடங்கி வைத்தார். இந்தப் பூக்கள் வரும் கோடை சீசனில் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.