

திருமுடிவாக்கம்: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் நேற்று பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் 17 வயதே ஆன சிறுமி என்பதால் அவரை மீட்டு சமூக நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பெற்றோர் சம்மதத்துடன் நேற்று பழந்தண்டலத்தில் உள்ள வீட்டில் திருமணம் நடைபெற்றதாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு அலுவலர் அமுதாவுக்கு தகவல் கிடைத்தது.
அவர், இது குறித்து படப்பையைச் சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரி செல்விக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அதிகாரி செல்வி, தமது குழுவினருடன் நேற்று நள்ளிரவு பழந்தண்டலம் சென்று, அங்கு திருமணம் செய்த இளைஞருடன் இருந்த சிறுமியை மீட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தார்.
அவர் சிறுமி என்று தெரிந்தும் திருமணம் செய்த பழந்தண்டலம், சிக்னல் ஆபீஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் தேவா (22), சிறுமியின் பெற்றோர், இளைஞரின் பெற்றோர் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.