

தூத்துக்குடி: மதரீதியிலான மோதலை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டதாக, சென்னை யூடியூபரை, தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டை அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேல்(55). யூடியூபரான இவர் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். வரலாறு, அரசியல், மழை வளம் குறித்து தனது கருத்துக்களை யூடியூபில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இவர் மதரீதியிலான மோதலை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்டுள்ளார் என, தூத்துக்குடியை சேர்ந்த போதகர் ஒருவர், திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசுவிடம் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி, பெண்களின் மாண்பு குறித்து அவதூறாக பதிவிடுதல், மத உணர்வை புண்படுத்துதல், மதங்களுக்கு இடையே மோதலை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பதிவிடுதல் என, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணவேலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.