

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை குறிவைத்து, தயாரிப்பாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.38.50 லட்சம் மோசடி செய்ய முயன்ற சைபர் கும்பல் குறித்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இந்நிறுவனம், தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
கடந்த 2-ம் தேதி முரளி கிருஷ்ணனின் செல்போன் எண் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, புதிய செல்போன் எண்ணில் இருந்து அவருக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகள் வந்தன.
அந்த எண்ணில், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பாளரின் முகப்புப் படம் (டி.பி.) வைக்கப்பட்டிருந்ததால், தயாரிப்பாளரே தகவல் அனுப்பியதாக முரளி கிருஷ்ணன் முதலில் நம்பியுள்ளார்.
அந்த குறுஞ்செய்தியில், அவசர தேவைக்காக ரூ.38.50 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு உடனடியாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரங்களும் அனுப்பப்பட்டிருந்தன.
ஆனால், தகவல் பரிமாற்றத்தில் சந்தேகம் அடைந்த முரளி கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை நேரடியாக தொடர்புகொண்டு உறுதி செய்தபோது, இது திட்டமிட்ட சைபர் மோசடி என்பது தெரியவந்தது. இதனால் பணத்தை அனுப்பாமல் அவர் தப்பித்தார்.
இதுகுறித்து, அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனுடன், மோசடி வாட்ஸ்-அப் செய்திகளின் ‘ஸ்கிரீன்ஷாட்' மற்றும் தொடர்புடைய ஆதாரங்களையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
மோசடியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.