

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள 25 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 6 இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வியாட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து கோலாலம்பூர் வழியாக நேற்றுமுன்தினம் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் இருந்த உணவுப் பொருள் பாக்கெட்டுகளை பிரித்து சோதனை செய்த போது, ரூ.15 கோடி மதிப்புள்ள 15 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 இளைஞர்களையும் அவர்கள் கொடுத்த தகவலின்படி கஞ்சாவை பெற்று செல்ல வந்த இளைஞரையும் கைது செய்தனர்.
அதேபோல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்த கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த உணவுப் பாக்கெட்டுகளைப் பிரித்து சோதனை செய்தபோது, ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 இளைஞர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் அதிகமாக பணம் சம்பாதிக்கும் ஆசையில், கடத்தல் குருவிகளாக செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 விமானங்களில் ரூ.25 கோடி மதிப்புள்ள 25 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.