

கிணத்துக்கடவு: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சி, பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். விவசாயியான இவர், கடந்த ஜூலை மாதம் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்குழாய் கிணறுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக தாமரைக்குளம் அலுவலகத்தில் விண்ணப்பித்து இணைப்பு பெற்றுள்ளார்.
இந்நிலையில், விவசாயி சுரேஷ்குமாரிடம் மின்வாரிய கள உதவியாளர் நவீன் குமார் என்பவர் நேற்று ரூ.1000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுபற்றி சுரேஷ்குமார் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த ரூபாய் நோட்டுகளை கள உதவியாளர் நவீன்குமார் பெற்றபோது அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், ரூ 6,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் வேல்முருகனையும் கைது செய்தனர்.