

சிவகாசி: சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலையில் வேதிப்பொருள் கலவை இயந்திரத்தை சோதனை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும், குஜராத்தை சேர்ந்த பொறியாளர் காயமடைந்தார்.
சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி - எம்.புதுப்பட்டி சாலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா பைரோடெக்னிக்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 3 யூனிட்டுகள் இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் இன்று (வியாழன்) பிற்பகல் 2 மணி அளவில் வேதிப்பொருள் கலவை செய்வதற்காக வாங்கப்பட்ட புதிய இயந்திரம் சோதனை செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்த அகமது இப்ராகிம் (45) என்ற பொறியாளர் இயந்திரத்தை பொருத்தி, சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஏதிர்பாராத விதமாக, வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த பட்டாசு ஆலை காசாளர் பாலமுருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், பொறியாளர் அகமது இப்ராகிம் 95 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.