

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.14) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஆக.15-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக.16, 17 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.18-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களிலும், ஆக.19-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைப் பொழிவு:
தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரியில் 7 செ.மீ, கோவை மாவட்டம் சோலையாரில் 5 செ.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 4 செ.மீ, கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.