காரில் தொங்கியபடி செல்லும் காவலரின் சிசிடிவி காட்சி. (அடுத்த படம்) கைதான யாரப் பாஷா மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் குட்கா மூட்டைகள்.
ஓசூரில் வாகன சோதனையின்போது காரை ஏற்றி காவலரை கொல்ல முயற்சி
ஓசூர்: ஓசூரில் வாகனத் தணிக்கையின்போது, காரை ஏற்றிக் கொல்ல முயன்ற நிலையில் காரின் முன்பகுதியில் தொங்கியபடி 4 கி.மீ. தூரம் சென்ற தலைமை காவலரை போலீஸார் மீட்டனர். காரில் குட்கா கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜுவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீஸார் நேற்று மதியம் 3.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் தலைமை காவலர் ராஜீவ் காந்தி என்பவர் மீது மோதியதோடு, அதிவேகத்தில் சென்றது.
இதில், காரின் பேனட்டில் ராஜீவ் காந்தி விழுந்த நிலையில், முன்பகுதியை பிடித்துக் கொண்டு தொங்கியபடி சென்றார். அப்போதும், ஓட்டுநர் காரை நிறுத்தவில்லை.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் சையத் முபாரக் தலைமையிலான போலீஸார், அந்த காரை துரத்திச் சென்றதோடு, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தர்கா பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் காரை மடக்கிப் பிடித்து, ராஜீவ் காந்தியை மீட்டனர்.
இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து காரை ஓட்டிய ஓசூர் காளேகுண்டா பகுதியைச் சேர்ந்த யாரப் பாஷா என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், காரில் கடத்த முயன்ற 390 கிலோ குட்கா, கர்நாடகா மதுபாட்டில்கள் 48 மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
