

மாணிக் உத்தீன் அஸ்கர், பகமதி மாஜி
செங்கல்பட்டு: ஒடிசா மாநில பெண்ணை கொலை செய்து சூட்கேசில் வைத்து ரயிலில் அனுப்பிய சம்பவத்தில் தொடர்புடைய, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவியை கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவர்களை சென்னை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். ஆக்ரா ரயில் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பக்க பெட்டியில் சிவப்பு நிற சூட்கேசில் தலை இல்லாமல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்த மனித உடலை, ஆக்ரா ரயில்வே போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், சென்னையில் இருந்து சூட்கேசில் மனித உடலை வைத்து அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்ரா ரயில்வே போலீஸார், சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு ஆணும், பெண்ணும் சூட் கேசை ரயில் பெட்டியில் வைத்து விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீஸார் சூட்கேசை வைத்துச் சென்ற ஆண்- பெண் சென்ற வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து வருவதை கண்டுபிடித்தனர். இதன்பேரில், கடந்த 21-ம் தேதி ரயில்வே போலீஸார் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் துறையினருடன் இணைந்து, மசூதி தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். இதில், வீட்டில் பெரிய பாத்திரத்தில் கொலையுண்ட உடலின் இருந்த சதைப்பகுதி கள் இருப்பதை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண் ஹையத்துன் நிஷா (38) என்பதும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் அஸ்கர்(22) மற்றும் பகமதி மாஜி என்ற பெண்ணும் ஒரே வீட்டில் வசித்து வந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி போலீ ஸார் கொலை வழக்கு பதிவு செய்து நிஷா யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய தம்பதியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதற்காக தனிபபடையினர் மணிப்பூர் மாநிலத்துக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மணிப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த அசாமைச் சேர்ந்த மாணிக் உத்தீன் அஸ்கர் (22) அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோரை, கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் நிஷாவுக்கும், அஸ்கருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததும், இது குறித்து அஸ்கர் மனைவிக்கு தெரிந்ததால், கணவரையும், நிஷாவையும் கண்டித்துள்ளார்.
இதனால், அஸ்கர், நிஷா உடனான தகாத உறவை முறித்துக் கொள்ள முயன்றதாகவும், ஆனால், நிஷா அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அஸ்கர், மனைவியுடன் சேர்ந்து நிஷாவை அடித்து கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், உடலை துண்டு துண்டாக வெட்டி சூட் கேசில் அடைத்து, ரயிலில் அனுப்பிவைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட கணவன், மனைவியை சென்னை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட நிஷாவின் தலை இதுவரை கிடைத்ததால் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.