

கைதான ஷேக் அப்துல்லாவின் பழைய படம் மற்றும் தற்போதைய படம்.
சென்னை: கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை நவீன ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு பாண்டியமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (அப்போது வயது 20) உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளி வந்த ஷேக் அப்துல்லா தலைமறைவானார்.
இந்நிலையில், நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள பிடியாணை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார், கடந்த 2007-ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தைக் கைப்பற்றினர்.
16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது தற்போதைய தோற்றம் எவ்வாறு மாறியிருக்கும் என்பதை நவீன 'ஏஐ' உருவ அமைப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் பிரத்யேகமாக உருவாக்கினர். அந்தப் படங்களை வைத்தும், சமூக வலைதளக் கணக்குகள், அவர் முன்பு வசித்த பகுதிகளின் அருகாமையிலும் தீவிர புலனாய்வு மேற்கொண்டனர்.
அதில், தற்போது 39 வயதாகும் ஷேக் அப்துல்லா, தனது அடையாளங்களை மறைத்து, திருமுல்லைவாயல் சோழம் பேடு மெயின் ரோடு பகுதியில் திருமண வாழ்க்கையைத் தொடங்கி குடும்பத்துடன் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருமுல்லைவாயல் பகுதியில் முகாமிட்ட தனிப்படை போலீஸார் ஷேக் அப்துல்லாவை நேற்று முன்தினம் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர், அவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். 19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த கொலை வழக்குக் குற்றவாளியை நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.