Last Updated : 20 Apr, 2023 07:16 PM

 

Published : 20 Apr 2023 07:16 PM
Last Updated : 20 Apr 2023 07:16 PM

காதல் என்ற பெயரில் சிறுமிகள் சீரழிக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஐகோர்ட்

மதுரை: காதல் என்ற பெயரில் சிறுமிகள சீரழிக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘என் 17 வயது மகளை அஜய் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். அவரால் என் மகள் உயிருக்கு ஆபத்து உள்ளது. என் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

"தினமும் 14 முதல் 18 வயதுக்குட்ட சிறுமிகளை கண்டுபிடிக்கக் கோரும் ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. காதல் என்ற போர்வையில் சில இளைஞர்கள் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர். இது பாலியல் துன்புறுத்தலில் இருந்து சிறுமிகளை பாதுகாக்கும் சட்டப்படி குற்றமாகும். அதன் பிறகு அந்த சிறுமிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, அந்தச் சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமிகளின் இந்த நிலைமைகள் வேதனையானது.

இந்தக் குற்றங்கள் சமூகத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தக் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் பெண்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு வாலிப வயதில் தங்களின் சட்டவிரோத ஆசைகளை பூர்த்தி செய்ய சிறுமிகளின் வாழ்க்கை சீரழிக்கப்பவர்களை கைது செய்து வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும். இதுபோல் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பாவி சிறுமிகளின் வாழ்க்கை சீரழிவதை தடுக்க முடியும்.

எனவே, சிறுமி கடத்தல் வழக்குகளை பெண்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்ப பிரிவிடம் ஒப்படைக்கலாம். இது தொடர்பாக விசாரணை அமைப்பை சீரமைக்கும் வகையில், சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு செயல்படும் விவரங்களை அரசு தெரிவிக்க வேண்டும்.

இதனால், தமிழகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, அவற்றின் செயல்பாடு, இந்த சிறப்பு பிரிவுகள் ஆண்டுக்கு சராசரியாக விசாரிக்கும் வழக்குகள், சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் எண்ணிக்கை, சிறப்பு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை டிஜிபி ஜூன் 5-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரின் மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x