Published : 10 Apr 2023 06:05 AM
Last Updated : 10 Apr 2023 06:05 AM

திருவள்ளூர் | 2 நாட்களில் 7 போலி மருத்துவர்கள் கைது: மருத்துவ அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 7 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் குறித்துமாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், மருத்துவஅதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம், பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் பிளஸ் 2 மற்றும் லேப் டெக்னீஷியன் படித்துவிட்டு, திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி, அங்கு ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

அதேபோல், ஆர்.கே.பேட்டைஅருகே உள்ள காளிகாபுரத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷ், எலக்ட்ரோபதி என்ற படிப்பை படித்துவிட்டு, செங்கட்டானூர் பகுதியில், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் பள்ளிப்பட்டு அருகே உள்ள பெருமாநல்லூரை சேர்ந்த வடிவேலு 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு, பள்ளிப்பட்டு பகுதியில் கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதேபோல் கும்மிடிப்பூண்டி அருகே சிந்தாலகுப்பம் பகுதியில், எளாவூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் செல்தெரபி மற்றும் ஆயுர்வேதா படித்துவிட்டு, ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் கவரைப்பேட்டை பகுதியில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானசுந்தரி, சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு பகுதியில் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் பி.ஏ. படித்துவிட்டு இரு சக்கர வாகனம் மூலம் ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி சிப்காட், கவரைப்பேட்டை மற்றும் ஊத்துக்கோட்டை போலீஸார் போலி மருத்துவர்கள் 6 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு பகுதியில் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், பாதிரிவேடு பகுதியை ராமலிங்கம் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்துவிட்டு, கடந்த 25 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து, பாதிரிவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமலிங்கத்தை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x