Published : 13 Mar 2023 08:54 PM
Last Updated : 13 Mar 2023 08:54 PM

கரூர் | வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,200 லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 3 ஆண்டுகள் சிறை

கரூர்: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,200 லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், உடந்தையாக இருந்த கிராம உதவியாளருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கோவக்குளத்தை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்தகாத் தான்மகன் பெரியசாமி. இவர் மனைவி செல்லம்மாள். செல்லம்மாளின் தந்தை இறந்துவிட்டதால் மனைவி செல்லம்மாளுக்கு வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2010ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக 2010ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி கிருஷ்ணராயபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கே.பெரியசாமியை அணுகி சான்றிதழ் கேட்டபோது ரூ.1,200 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத பெரியசாமி இது குறித்து திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸார் அறிவுறுத்தலின் பேரில், பெரியசாமி ரூ.1,200 லஞ்சம் வழங்கியப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸார் கிராம நிர்வாக அலுவலர் கே.பெரியசாமி, அவருக்கு உடந்தையாக இருந்த கிராம உதவியாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சிறப்பு நீதிபதி சி.ராஜலிங்கம் இன்று (மார்ச் 13ம் தேதி) அளித்த தீர்ப்பில், ”கிராம நிர்வாக அலுவலர் கே.பெரியசாமிக்கு (72) லஞ்சம் கேட்டதற்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை, ரூ.10,000 அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும், 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை, அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.10,000 அபராதம், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கிராம உதவியாளர் எஸ்.கிருஷ்ணனுக்கு (67) 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் ரூ.10,000 விதித்தும், அபராத தொகைசெலுத்த தவறினால் மேலும் 3 மாதகடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x